ஜெயிப்பதற்கு மட்டும் கூட்டணி வேண்டுமாம், மற்றதற்கு எல்லாம் அவங்களாம்…சேலம் கூட்டத்தில் விஜய் பரபரப்பு பேச்சு!
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதற்காக கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். இன்று(13-02-2026) சேலம், சீல நாயக்கன்பட்டியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் கார் மூலம் கூட்டம் நடைபெறும் இடத்தை வந்தடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். முதலில் கட்சி நிர்வாகிகள் பேசினர். அதனை தொடர்ந்து விஜய் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தைரியம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. நம்மை குறைத்து மதிப்பிடும்போது தான் நம்மை யார் என நிரூபித்துக் காண்பிப்பதற்கான உத்வேகம் பிறக்கும். விஜய்யே வீட்டை விட்டு வெளியே வா…பனையூரை விட்டு வெளியே வா என்கிறார்கள். என்னுடைய வீடு எங்கே இருக்கிறது தெரியுமா? இந்த தமிழ்நாடு. மற்றவர்களுக்கு தான் இது மாநிலம். தமிழ்நாடு எனக்கு ஒரு வீடு. என் வீட்டில் 8 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நான் உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கேன். இந்த விஜய் என்னங்க தப்பு பண்ணான். தன்னை நேசிச்ச மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தப்பா? நான் போய் மக்களை சந்திக்க உரிய இடம் கூட கொடுக்கமாட்டாங்க. இது என்ன நியாயங்க?”. இந்தத் தேர்தலில் வண்டி வண்டியா பணத்தை கொட்டுவாங்க, அத வாங்கிகோங்க. அதெல்லாம் உங்க பணம். வாங்கிட்டு அவங்க காதுலயே விசில ஊதி அனுப்புங்க. வெறுப்பு அரசியல் பண்ண நான் வரல. மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியலுக்கு வந்திருக்கேன். அனுபவம் இல்லாதவர்கள் என்று தவெகவை விமர்சிக்கிறார்கள். உங்க அனுபவம் என்னனு சொல்லட்டுமா… கட்சி தொடங்கிய அண்ணாவை, எம்.ஜி.ஆரை மறந்தது. ஜெயலலிதாவை மறந்துதான் உங்க அனுபவம். எங்களுக்கு அனுபவம் இல்லை தான். கொள்ளை அடிக்க அனுபவம் இல்லை. சுட்டுப்போட்டாலும் அது வராது.” “அடுத்தவங்க ஆரம்பிச்ச கட்சியில அடுத்தவங்களோட அட்ரஸ்ல வாழ்றவங்க தனியா கட்சி ஆரம்பிச்சு 1% வாக்கையாவது வாங்க தகுதி இருக்கா?. நமக்கு அனுபவம் இல்லையாம். ஆம், நமக்கு கொள்ளையடிப்பதில் அனுபவமில்லைதான்..சரண்டர் ஆவதில் அனுபவம் இல்லைதான். காமராஜர், எம்.ஜி.ஆர் போல என்னால் நல்லாட்சி கொடுக்க முடியும்.
ஆட்சியே முடிய போகிற நேரத்தில் கதவைத் தட்டி உங்கள் கனவு என்ன என்று கேட்கிறார்கள். ஏழைகளின் கனவு என்ன என்று தெரியுமா? ஸ்டாலின் சார். த.வெ.க. ஆட்சியில் உங்கள் கனவு அனைத்தும் நிஜமாகும். சட்டம், ஒழுங்கில், பெண்கள் பாதுகாப்பில், இளைஞர்கள் வேலை வாய்ப்பில் தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல். மொத்தத்தில் திமுக ஆட்சியே அவுட் ஆப் கண்ட்ரோல் தான். ஆட்சியில் பங்கு கேட்டால் தர மறுக்கிறார்கள். ஜெயிப்பதற்கு மட்டுமே கூட்டணி வேண்டுமாம். மற்றதற்கு எல்லாமே அவங்க தான். டிஎன்பிஎஸ்சி தேர்வை கூட ஒழுங்காக நடத்த தெரியவில்லை. இதில் உலக அளவில் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறதாம். வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.