தமிழக சட்டமன்றத் தேர்தல்: அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை உள்ளிட்ட பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்…!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் எதிரும், புதிருமாக இருந்த அதிமுக- பாஜக இந்த முறை சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து களம் காண்கின்றன. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனிடையே, கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் தொடர் சுற்றுப்பயணம் செய்வதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதில், 2 முதல் 7 சட்டமன்ற தொகுதிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம். பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், வானதி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழிசை சவுந்திரராஜனுக்கு கும்மிடிபூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, பொள்ளாச்சி, கிளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பத்தூர் சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜா சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விபி துரைசாமிக்கு எழும்பூர், ராசிபுரம். பரமத்திவேலூரும், பொன் ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி. மேட்டுப்பாளையம், பழனி ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.