Rock Fort Times
Online News

திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி… * அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்!

தமிழகத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. அந்தவகையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். எஸ்.ஐ.டி. கல்லூரியில் 230 மாணவ, மாணவிகளுக்கும், யு.டி.சி.கல்லூரியில் 580 பேருக்கும், துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் 712 பேருக்கும், ஜிபிடி கல்லூரியில் 455 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மற்றும் கிழக்கு மாநகரக் திமுக செயலாளர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர் நீலமேகம், துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் காயாம்பு, மாமன்ற உறுப்பினர் கார்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, தாசில்தார்கள் விக்னேஷ், தனலட்சுமி, கல்லூரிகள் இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், முதற்கட்டமாக 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. வருகிற கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து ஜனவரி 10ம் தேதிக்கு பிறகு கருத்து கேட்பு நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடத்த உள்ளோம். அவர்கள் வழங்கக்கூடிய ஆலோசனைகளை பரிசீலித்து செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்