பி.எஸ்.ஆர். அறக்கட்டளை சார்பில் 1300 குழந்தைகளுடன் திருச்சியில் தீபாவளி கொண்டாட்டம்…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!
திருச்சியை மையமாக கொண்டு இயங்கி வரும் பி.எஸ்.ஆர். அறக்கட்டளை கடந்த பத்து வருடங்களாக நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருப்பதுடன் ஆதரவற்றோர், சாலையோர மக்களுக்கு உணவளிப்பது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுதல், குருதி கொடை வழங்குதல் உட்பட பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றது. குறிப்பாக, கடந்த 14 வருடங்களாக அரசு குழந்தைகள் காப்பகங்கள், அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகங்கள், குடிசைவாழ் பகுதியை சேர்ந்த குழந்தைகள் என 15 குழந்தைகளுடன் ஆரம்பித்த சிறார் தீபாவளி பயணம் இந்தாண்டு 1300 குழந்தைகளுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு சிறார் தீபாவளி கொண்டாடட்டத்துடன் பிஎஸ்ஆர் அறக்கட்டளையின் 10ம் ஆண்டு துவக்க விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாக பல்வேறு பிரிவுகளில் சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது.

விழாவிற்கு பிஎஸ்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகளையும், சமூக சேவகர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். கௌரவ விருந்தினராக எக்ஸல் குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் எம்.முருகானந்தம், சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பி.ராகுல்காந்தி, குழந்தைகள் நல குழுவின் தலைவர் பி.மோகன், நேஷனல் கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பி.எஸ்.ஆர். அறக்கட்டளையின் நிதி அறங்காவலர் டாக்டர் டி.குணசீலன், செயலாளர் அறங்காவலர் மாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பிஎஸ்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லா கூறுகையில், ஒரு இடத்தில் அத்தனை குழந்தைகளையும் ஒன்றிணைத்து புது ஆடை, சிறப்பு பரிசு, உணவு என ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்து அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பரவ செய்வதே எங்களின் நோக்கம். ஒவ்வொரு வருடத்திலும் தீபாவளி தேதிக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே இதற்கான பணிகளை ஆரம்பித்து விடுவோம், குழந்தைகளுக்கு தேவையான ஆடைகளை தேடி தேடி வாங்குவதுடன், அவர்களுக்கான பரிசு, உணவுகளையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்தே இல்லாமல் செயல்படுவோம் என்றார்.


Comments are closed.