Rock Fort Times
Online News

நோயாளியின் இதயத்தில் இருந்த 3 அடைப்புகளை நீக்கி திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை…!

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் நெஞ்சுவலி காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசோதனைகள் செய்து பார்த்ததில் 3 இடங்களில் இதயத்துக்கான தமனிகளில் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த அடைப்புகளை சரி செய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர் உதயஅருணா மேற்பார்வையில் மயக்கவியல் மருத்துவர்கள் இளங்கோ, சந்திரன், இருதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர் அஸ்வினி மற்றும் மருத்துவக் குழுவினர் சுமார் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த நோயாளியின் காலிலிருந்து ஒரு நரம்பையும், நெஞ்சு பகுதியில் ஒரு தமனியையும் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பெருந்தமனியில் இருந்து செல்லும் மூன்று ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை தாண்டி இதயத்திற்கு ரத்தக்குழாய் செல்லும் இடங்களுக்கு தனித்தனியாக பதியம் போல பொருத்தி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தனர். கடந்த வியாழக்கிழமை அறுவை சிகிச்சை நடந்த நிலையில், தொடர் கண்காணிப்பில் இருந்த நோயாளி தற்போது குணமடைந்துள்ளார். இந்த சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் பொழுது ரூ.5 லட்சம் வரை செலவாகும் நிலையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இவருக்கு எவ்வித செலவும் இன்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் இதுபோன்று இதய தமனிகளில் இரு அடைப்புகள் இருந்த நபருக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது தீவிர நிலையில் மூன்று அடைப்புகள் இருந்த நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற பாதிப்புகள் உள்ள நபர்கள் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்களாக இருக்கும் பட்சத்தில் திருச்சி அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என்றும் மருத்துவமனை முதல்வர் குமரவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், கொரோனா பாதிப்பு தற்போது தீவிரமடையவில்லை. எனினும் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்