2029-ல் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை முதல்வர் விஜயே அறிவிப்பார்…* திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி..!
திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறுகையில், நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகம் மகத்தான வெற்றி பெறும். சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசுவதற்கு அதிகாரமும், உரிமையும் உள்ளது. பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறுவதில் எங்களுக்கு தயக்கமே கிடையாது. நான் பிறப்பால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன். எங்களுடைய ஒரே கருத்து ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். ஒவ்வொரு கட்சியும் அந்த கட்சியின் தலைவர்களை பிரதமர் வேட்பாளராக கூறுவதற்கு உரிமை உண்டு. அந்தவகையில் 140 ஆண்டுகால பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நாங்கள் ராகுல் காந்தியை தான் முன்னிலைப் படுத்துகிறோம் . இவ்வாறு அவர் கூறினார். ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் எனக் கூற மாணிக்கம் தாகூர் தயக்கம் காட்டுகிறாரே என்கிற கேள்விக்கு, 2029 ல் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர். இதனை முதலமைச்சர்
விஜயே அறிவிப்பார். ராகுல் காந்தியை பிரதமராக விஜய் அறிவிக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு இப்போது இந்த கேள்வி தேவையில்லாதது. போராட்டமும் தியாகமும் நிறைந்த ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும். விலைவாசி உயர்வு இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்கிற கேள்விக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் விஜயின் இமேஜ் உச்சத்தில் தான் இருக்க போகிறது. நிச்சயம் இந்த இடைத் தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என பதில் அளித்தார்.

Comments are closed.