தமிழ்நாட்டில் வேறு எந்த மாநகரத்திலும் இல்லாத அளவிற்கு தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் திருச்சி மாநகரில் அதிகம் உள்ளது . அரசு பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகளுக்கும் போட்டி ஒருபுறம் இருந்தாலும் தனியார் பேருந்துகளுக்குள் கலெக்சன் அதிகம் பண்ண வேண்டும் என்ற போட்டியால் நான் முந்தி நீ முந்தி என்று வேகமாக பேருந்துகளை இயக்குவது வாடிக்கையாகி வருகிறது . இதனால் வெளியில் வராத அளவில் அடிக்கடி விபத்துகளில் பாதிக்கப்படுவோரும் உண்டு. அதேசமயம் உயிர்பலி ஏற்படுத்துகிற விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகிறது .அந்த வரிசையில் இன்று காலை பேருந்துகளின் தொழில் போட்டியால் சாலையில் நடந்து சென்ற ஒரு அப்பாவி பலியானார் . அந்த விபத்து பற்றிய விபரம் வருமாறு:
திருச்சி கண்டோன்மென்ட் பாரதியார் சாலையில் 2 தனியார் பேருந்துகள் போட்டி போட்டு வந்து கொண்டிருந்தன. அதில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு பேருந்து, அருகே இருந்த பெட்ரோல் பங்குக்குள் நுழைந்தது. இந்த சம்பவத்தை கண்ட பொதுமக்கள் பேருந்தை ஓட்டி வந்த ஸ்ரீரங்கத்தை சோ்ந்த சுந்தராஜன் (41) என்பவரை தாக்கியதோடு பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினா். அங்கு இரும்பு தூணில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையை உடைத்து சாய்த்தது. மேலும் அப்பேருந்து பெட்ரோல் பங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்தின் மீது மோதியதில் அப்பேருந்தும் சேதமடைந்தது. இந்த விபத்தில் பெட்ரோல் பங்கு அருகே நடந்து சென்ற ஒருவர் பரிதாபமாக பலியானார். கண்ட்டோண்மென்ட் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பலியானவர் யார் எந்த ஊர் என்று விவரம் சேகரித்து வருகின்றனர். விசாரணையில் ரெயில்வே ஊழியா் மோகன்(35) என்பது தொியவந்தது.

