திருச்சியில் அமைச்சர் நேரு பங்கேற்ற விழாவில் நிகழ்விடம் அருகே பயங்கர வெடி சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி பயன்பாட்டிற்கு புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் முன்பு இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் செயற்படுத்திருந்தது திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் நேரு மாநகராட்சி மைய அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாநகராட்சி வாடிக்கையாளர் சேவை மையம் அருகில் இரும்பினால் அமைக்கப்பட்டிருந்த சுமார் 150அடி உயர் வாக்கி டாக்கி டவர் திடீரென ஒடிந்து விழுந்தது. ஒடிந்து விழுந்த டவர் மாநகராட்சி முன்பு இருந்த மின்சார வாரிய ட்ரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
இதனால் அமைச்சர் விழாவில் கலந்துகொள்ள காத்திருந்த மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் வெடிசத்தம் கேட்ட திசை நோக்கி ஓடினர். அங்கு டவர் ஒடிந்து டிரான்ஸ்பார்மர் மீது விழுந்ததால் ஏற்பட்ட வெடிச்சத்தம் என்பதை அறிந்தவுடன் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர். இந்த விபத்து காரணமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதன் பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் அமைச்சர் நேரு கலந்துகொண்டு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து ஒடிந்து விழுந்த டவரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்காக வாக்கி டாக்கி பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக இந்த டவர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 45 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த டவர் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது இது ஒடிந்து விழுந்து உள்ளதால் மாநகராட்சி அலுவலர்களுக்குள்ளான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பங்கேற்க இருந்த விழா நிகழ்விடம் அருகே திடீரென வெடிச் சத்தம் கேட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
