ராக்போர்ட் டைம்ஸ் செய்தி எதிரொலி: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் திருட்டுதனமாக மது விற்றவர்கள் கைது – சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ் நடவடிக்கை…!
76-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று (26-01-2025) விடுமுறை அளிக்கப்பட்டது. கள்ள சந்தையில் மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அரசின் உத்தரவுப்படி, அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால், டாஸ்மாக் பார்களில் மதுபாட்டில்கள் தாராளமாக விற்கப்பட்டன. குறிப்பாக திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி எதிரே உள்ள டாஸ்மாக் பாரில் மது விற்பனை “படு ஜோராக”நடந்தது. பெட்டி, பெட்டியாக மது வகைகளை வைத்துக்கொண்டு ஒரு மது பாட்டிலுக்கு 50லிருந்து 100 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஜி-பே மூலமும் மது வகைகள் விற்கப்பட்டன. அதனை அங்கேயே வைத்து குடிக்கவும் செய்தனர். இங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டது ஒரு புறம் இருந்தாலும் பார் எதிரே காவல் வாகனம் நின்றது. ஆனால், அவர்கள் இந்த மது விற்பனையை தடுக்க முன் வரவில்லை. குடியரசு தினநாளில் சரக்கு விற்று கல்லா கட்டியது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாக பார்க்கப்பட்டது. மது விற்பனை தொடர்பாக திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் சோசியல் மீடியாவில் தகுந்த ஆதாரங்களுடன் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ் தக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது விற்றதாக மாணிக்கம்( 57) உட்பட சிலர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோ வெளியான ஒரு மணி நேரத்தில் துரித நடவடிக்கை எடுத்த சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் மற்றும் தவறை சுட்டிக்காட்டிய ராக்போர்ட் டைம்ஸ் நிர்வாகத்தினருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
Comments are closed.