தனியாக சிக்கும் சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது: மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் தவறாக நடந்தவரும் சிக்கினார்…!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கற்றல்திறன் குறைபாடுடையவர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் சிறுமியை தேடியும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி அந்த சிறுமி அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நின்றபோது மீட்டனர். அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தன்னை ஒருவர் அழைத்து சென்றதாக கூறினார். இதுதொடர்பாக முதுகாடு கிராமத்தைச் சேர்ந்த துரைராசு மகன் எலக்ட்ரீசியன் பெரியசாமி (19) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற சிறுமியை ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கோழிப்பண்ணையில் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. மேலும், அந்த சிறுமி அணிந்திருந்த தோட்டை வாங்கி ரூ3000க்கு அடகு வைத்து ரூ.1500 அந்த சிறுமியிடம் கொடுத்துவிட்டு மீதி ரூ.1500 பணத்துடன் மீண்டும் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் விட்டு சென்றுள்ளார். இதேபோல, தனியாக சிக்கும் சிறுமிகளையும் அவர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, ஒரு வீட்டில் ஃபேன் ரிப்பேர் செய்யச் சென்ற தஞ்சை மாவட்டம், படப்பனார்வயல் கிராமத்தைச் சேர்ந்த ராமசுந்தரம் மகன் எலக்ட்ரீசியன் தமிழ்செல்வன் (27) என்பவர் அந்த வீட்டிற்கு அருகில் மனவளர்ச்சி குன்றிய பெண் தனியாக இருப்பதைப் பார்த்து அந்த வீட்டிற்குள் சென்று அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இதை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாரதி வழக்குபதிவு செய்து தமிழ்ச் செல்வனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments are closed.