ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. பங்குனி பொங்கல் திருவிழா கடந்தமாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மாலை வீதி உலா உடன் சிறப்பு பூஜையுடன் முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று அக்னிச்சட்டி விழா நடந்தது. அப்போது பக்தர்கள் பூப்பெட்டி சுமந்து நேர்த்திக் கடன் செலுத்துதல், கரும்பால் தொட்டில் அதாவது அம்மனிடம் வேண்டிக்கொண்டு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை கரும்பால் தொட்டில்கட்டி அம்மன் கோவிலை வலம் வரும் நேர்த்திக் கடன் ,தீச்சட்டி ஏந்தி கோவிலை வலம் வருதல், பள்ளம் தோண்டி அக்கினியை வளர்த்து அருளுடன் அதில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துதல்., கோடை காலத்தில் அம்மை போன்ற நோய்கள் தாக்காத வண்ணம் இருக்க, உடல் ஆரோக்கியத்திற்காக உடல் முழுவதும் சகதியை பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வேப்பிலையுடன் நடனம் ஆடி கோவிலை வலம் வருதல் போன்ற வைபவங்கள் நேற்று நடந்தன. 14 நாட்கள் நடைபெறும் திருவிழா வரும் சனிக்கிழமை முளைப்பாரி உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

