Rock Fort Times
Online News

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தொழிற்கடன் பெற ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்வு- திருச்சி கலெக்டர் பிரதீப்குமார்…!

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினத்தவர்கள் தொழிற்கடன் பெறுவோருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், திருச்சி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றில் கடன்பெற விண்ணப்பிப்போர் 18 முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், திட்டம் 1ல் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமான உச்சரவரம்பு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ. 98 ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் என இருந்து வந்த நிலையில், தற்போது கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின்கீழ் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் திட்ட தொழில் அறிக்கையுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்