ரூ.90 ஆயிரம் கடன் தள்ளுபடி: காந்தி மார்க்கெட் கூலித் தொழிலாளியின் கண்ணீரை துடைத்த திருச்சி மாவட்ட கலெக்டர்…!
திருச்சி, பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (42). கூலித் தொழிலாளியான இவர், காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கி அதன் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு கார்த்தி (வயது 13) என்ற 9ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். பாலக்கரை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் வள்ளி கடன் வாங்கியுள்ளார். இதற்கிடையே வள்ளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி, சென்னை, புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், வள்ளி வாங்கிய கடன் 90 ஆயிரத்தை உடனடியாக கட்ட வலியுறுத்தி, மோகனிடம் குழுத் தலைவி உள்ளிட்டோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. மனைவியின் சிகிச்சைக்காக ஏற்கனவே கடன் வாங்கி மோகன் செலவு செய்த நிலையில், தற்போது தினந்தோறும் வாழ்வாதாரத்திற்கே போராடி வருகிறார். மேலும், மகனை நன்றாக படிக்க வைக்க விரும்பிய மோகன், தொடர் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம், கண்ணீர் மல்க மோகன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், ‘தனது மகன் நன்றாக படிக்க வேண்டும். அதற்கு உதவி செய்ய வேண்டும். எனது மனைவி வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து இருந்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்த கலெக்டர், கூலித்தொழிலாளியின் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனது மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு அவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டதோடு தனது மகனின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments are closed.