பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் ஆஜராகி விளக்கம் அளித்தார். அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துவரும் நபர்களின் பற்களை பிடுங்கியதாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கஅளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.புகார்குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐ.ஜி. ஆறு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது . இந்த விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் கல்லிடைக்குறிச்சி காவலர் ராஜ்குமார் மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவலர் போகபூமன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேத நாராயணன் உள்ளிட்ட 5 பேர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையதலைவர் முன்பு ஆஜராகினர். இவர்களிடம் எஸ் பி, மகேஸ்வரன் தலைமையில் 3 பேர் கொண்டகுழுவினர் விசாரணை நடத்தினர். இந்தசம்பவம் குறித்து ஏ.எஸ். பி. பல்வீர் சிங் ஏப்ரல் 3ஆம் தேதி மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவர் ஆஜரானார். பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
