Rock Fort Times
Online News

மதுரையில் துயர சம்பவம்: தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு, 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையத்தில் பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.  இதில் மதுரை, தேனி , திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்து வேலைக்கும், படிப்பதற்கும் சென்று வருகின்றனர்.  இந்நிலையில் இன்று(12-09-2024) காலை 4 மணியளவில் விடுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை அருகிலிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி விடுதிக்குள் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விடுதியில் இருந்த பிரிட்ஜ் வெடித்து அதிலுள்ள சிலிண்டரிலிருந்து வெளியான நச்சுப்புகையால் பெண்கள் சிலர் மயங்கி விழுந்தனர். அதில் ஆசிரியர் பரிமளாவும், சரண்யா என்பவரும் உயிரிழந்தனர். விடுதி் வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த பல பெண்களின் கல்விச் சான்றிதழ்கள் முழுவதுமாக எரிந்து கருகியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள புஷ்பா என்பவர் லீசுக்கு எடுத்து இந்த விடுதியை நடத்தி வந்துள்ளார். பழமையான கட்டிடம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் அதையும் மீறி விடுதி செயல்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்