திருச்சி என்.ஐ.டி.யில் ஒப்பந்த ஊழியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம்: விடுதி வார்டன் ராஜினாமா…!
திருச்சி என்.ஐ.டி.-ல் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக என்ஐடி வளாகத்திலேயே விடுதி வசதியும் உள்ளது. இந்நிலையில், மாணவ- மாணவிகளின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும் இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி ஒருவர் தனியாக இருக்கும் போது இணையதள சேவை அளிப்பதற்காக சென்ற ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். உடனே, சுதாரித்துக் கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட அங்கிருந்த மற்ற மாணவர்கள் கதிரேசனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரேசனை கைது செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாணவிகள் தங்கும் அறையில் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட என்ஐடி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவ- மாணவிகள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவிகள் அரைகுறை ஆடையுடன் இருப்பதால் தான் இதுபோன்ற சம்பவம் நடக்கிறது என்று விடுதி வார்டன் ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க கோரியும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் மற்றும் என்ஐடி இயக்குனர் அகிலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், விடுதி வார்டன் பேபி என்பவர் மாணவர்கள் மத்தியில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். அதன் பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், இன்று (31-08-2024)விடுதி வார்டன் பேபி தன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற இரு விடுதி வார்டன்களும் விரைவில் ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Comments are closed.