புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ரயில் நிலையம் அருகே புலியூர் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தவர்களுக்கெல்லாம் அதிகப்படியாக பணம் வந்துள்ளது. அதாவது ரூ.100 எடுக்க முயற்சித்தவர்களுக்கு ரூ. 500 வந்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிலர் அந்த ஏடிஎம் மையத்தின் கட்டிட உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் ஏடிஎம் மையத்தின் மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அந்த நிறுவனத்தினர் ஏடிஎம் எந்திரத்தை கழற்றி சரி பார்த்தனர். அப்போது ரூ.100 வைக்க வேண்டிய பகுதியில் ரூ. 500 தாள்களை வைத்ததுதான் இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் பணியாளர் மணிகண்டன் (26), கீரனூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த மே 18-ம் தேதி மாலை ரூ.3.40 லட்சமும், 19-ம் தேதி மாலை ரூ.2.50 லட்சமும் என மொத்தம் ரூ.5.90 லட்சம் வைக்கப்பட்டது. அப்போது தவறுதலாக ரூ. 100 தாள்களை வைக்க வேண்டிய பகுதியில் ரூ. 500 தாள்களை வைத்து விட்டேன். மே 21-ம் தேதி காலை இந்தத் தவறு கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆனாலும், ரூ. 1.40 லட்சம் கணக்கில் வரவில்லை. பணம் எடுத்த வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாகச் சென்றுள்ளது. எனவே, அந்த வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரித்து அவர்களிடம் இருந்து அதிகப்படியாக சென்ற பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.