Rock Fort Times
Online News

சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை…!

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளி பரப்பியதாக ரெட் பிக்ஸ்யூடியூப் சேனல் செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரை, ரயில் மூலம் சென்னை அழைத்து வந்த திருச்சி போலீசார் சென்னையிலிருந்து வேன் மூலம் அழைத்து வந்து திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்டக் காவல்துறை கணினிசார் குற்றவியல் பிரிவு அலுவலகத்தில் (சைபர் கிரைம்) ஒப்படைத்தனர்.  அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு பெலிக்ஸ் ஜெரால்டை வருகிற 27ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் திருச்சி காவல்துறை அதிகாரிகள் இன்று (மே. 14) காலை சோதனையில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய நிலையில், அது தொடர்பான ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை இருக்கிறதா என்று தேடுதல் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்