திருச்சியில் சங்கிலியை அறுத்துக் கொண்டு வந்து சிறுமியை கடித்து குதறிய நாய்: டாக்டர் மீது வழக்கு பாய்ந்தது…!
திருச்சி உறையூர் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ஹிதாயத்துல்லா மனைவி சல்மா. இந்த தம்பதியின் மகள் தல்பியா (7). சல்மா மகளை டியூசன் முடிந்து வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது இவர்களது எதிர் வீட்டில் சங்கிலியால் கட்டி போடப்பட்டிருந்த வளர்ப்பு நாய் ஒன்று அவர்களைப் பார்த்து குரைத்தது. பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நாய் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி வந்து சிறுமி தல்பியாவை கடித்து குதறியது.
இதில், உடலில் பல இடங்களில் ரத்த காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில், வளர்ப்பு நாயின் உரிமையாளரான தனியார் மருத்துவமனை டாக்டர் செந்தில்குமார் மீது உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை ராட்வீலர் என்ற வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் அந்த சிறுமியும் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, நாய் வளர்ப்போர் அதனை பிறருக்கு தொல்லை கொடுக்காமல் கட்டி வைத்து வளர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.