Rock Fort Times
Online News

மணப்பாறையில் பரபரப்பு: நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் எழிலரசி (வயது 60). இவர் இன்று(07-05-2024) கோவிலுக்கு சென்றுவிட்டு மணப்பாறைபட்டி சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். உதயம் தியேட்டர் அருகே செல்லும்போது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்‌ ஒருவர்‌ திடீரென, எழிலரசி கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்ட எழிலரசி அந்த வாலிபரிடம் போராடினார். இதனைப் பார்த்த அப்பகுதியில் கடை வைத்துள்ள குமரேசன் ஓடி வந்தார். அவரைப் பார்த்ததும் எழிலரசியை கீழே தள்ளி விட்டு விட்டு அந்த நபர் தப்பி ஓடினார் . அந்த நபரை குமரேசன் விரட்டிச் சென்று பிடித்தார். இதனைப் பார்த்ததும் அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் மர்ம நபரை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த நபரை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைசாமி என்பது தெரிய வந்தது.
அவர் எதற்காக மணப்பாறை வந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில், இந்த சம்பவத்தில் கழுத்துப் பகுதியில் காயம் அடைந்த எழிலரசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்