Rock Fort Times
Online News

காணாமல் போன நான்கு சக்கர வாகன உரிமையாளருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி குறைதீர் ஆணையம் உத்தரவு…!

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் த.கேசவன் வாதம்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரது மகன் சுகுமாரன். இவர், 2019ம் ஆண்டு தொட்டியம் கோவா பேக்கரி அருகில் தனது டாரஸ் லாரியை நிறுத்தி இருந்தார். அந்த லாரி திடீரென காணாமல் போனது. இதுகுறித்து நாமக்கல் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இழப்பீடு கோரி மனு கொடுத்தார். ஆனால், அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் அவருக்கு எவ்வித இழப்பீடும் வழங்கவில்லை. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சுகுமாரன் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த புகார் மனுவினை விசாரணை செய்த நுகர்வோர் நீதிமன்றமானது, மேற்படி வாகனம் காணாமல் போனது உண்மை என்றும், அதன்பேரில் முதல் தகவல் அறிக்கையானது பதிவு செய்யப்பட்டு வாகனத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என காவல் துறையினரும் இறுதி அறிக்கை தாக்கல் செய்திருந்த காரணத்தினாலும், காணாமல் போன வாகனத்திற்கு இழப்பீடு கொடுக்க வேண்டிய அவசியம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உண்டு என தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், காணாமல் போன வாகனத்தின் உரிமையாளருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.8 லட்சத்தை வழக்கு தாக்கல் செய்த
31.8.2020ம் தேதியிலிருருந்து 9 சதவீத வட்டியுடன் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் கொடுக்க வேண்டும் என்றும், இழப்பீடு தொகையை கொடுக்காமல் வாகன உரிமையாளரை அலைக்கழித்த மற்றும் காப்பீட்டினை நிராகரித்த காரணத்தினால் இழப்பீடாக ரூ.2 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டது. சுகுமாரன் தரப்பில் வழக்கறிஞர் த.கேசவன் வாதாடினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்