திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர்ப்புறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.
திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை மறைந்த பேராசிரியர் அன்பழகன் 1984-ம் ஆண்டு திறந்து வைத்தார். சம்பவத்தன்று நள்ளிரவு அண்ணா சிலைக்கு காவி சாயமும், நெற்றியில் குங்குமமும் வைக்கப்பட்டிருந்தது.

இதனை கண்ட திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதி திமுக கவுன்சிலர் முருகானந்தம், வட்டச் செயலாளர் தமிழ் மற்றும் நிர்வாகிகள், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர், மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக காவி சாயம் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யப்பட்டு சிலைக்கு பூட்டு போடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.