Rock Fort Times
Online News

பன்றி வளர்ப்பில் சகோதரர்களிடையே முன்விரோதம்: திருச்சியில் அடுத்தடுத்து அரங்கேறிய 3 படுகொலைகள்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கேபிள் சேகர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவர், திருச்சி மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்த தம்பதியின் மகன் முத்துக்குமார்(27) அரியமங்கலத்தில் இன்று(30-04-2024) பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இவரது தந்தை கேபிள் சேகரும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மகனும் கொலை செய்யப்பட்டுள்ளார்.  முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வருமாறு:-

 

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர் கேபிள், பன்றி வளர்ப்பு, பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.  கட்ட பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.  அதிமுக பகுதி செயலாளராகவும்,  ,திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  இவரது மனைவி கயல்விழி சேகர்.  இவர், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராக பதவி வகித்தவர் ஆவார்.  கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் ( 27). டிப்ளமோ இன்ஜினியர்.  பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும், கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.  தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட தகராறில் கடந்த 2011- ம் ஆண்டு வீட்டின் அருகே கேபிள் சேகர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த பரத்குமார், சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.  இந்த கொலை வழக்கு திருச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

 

இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வரும்நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு பெரியசாமியின் மகனும், பிரபல ரவுடியுமான சிலம்பரசன்(35) அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று கரூர் ஜே.எம்.-2 குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்த முத்துக்குமார்(28), அதே பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் அரியமங்கலத்தை சேர்ந்த காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதபுரம் ரஞ்சித் (19), அரியமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (20) ஆகிய 4 பே சரண் அடைந்தனர்.

இந்நிலையில்  திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் முத்துக்குமார் சரமாரியாக ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.  கொலை  செய்யப்பட்ட முத்துக்குமார் மீது கொலை, அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இறந்து போன முத்துக்குமாருக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

முன் விரோதம் காரணமாக அன்று தந்தை கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று மகனும் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார்.  முன்விரோதம் காரணமாக அடுத்தடுத்து அரங்கேறும் இந்த கொலைகள் அரியமங்கலம் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்