Rock Fort Times
Online News

திருச்சியில் பட்டப் பகலில் பயங்கரம்: அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டி படுகொலை…!

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவரது மனைவி கயல்விழி சேகர். இவர், திருச்சி மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்த தம்பதியின் மகன் முத்துக்குமார்( 32). இவர் இன்று(30-04-2024) காலை சுமார் 11 மணியளவில் திருச்சி அரியமங்கலம்  எஸ் ஐ டி கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்?, முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் காரணமாக அரியமங்கலம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  கொலை செய்யப்பட்ட முத்துக்குமாரின் தந்தை கேபிள் சேகரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்