ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா – முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது…!
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா அடுத்த மாதம் மே 6 ம் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு இன்று(26-04-2024) சித்திரை தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.

முன்னதாக, முகூர்த்த காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு சந்தனம், மா இலை மற்றும் மாலைகள் கட்டப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டு மேள, தாளங்கள் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. இவ்விழாவில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் தலைமை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து வருகிற 28ம் தேதி காலை சித்திரை தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து மே மாதம் 8-ம் தேதி வரை 11 நாட்கள் காலையும், மாலையும் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
விழாவின் முக்கிய நாளான மே மாதம் 6ம் தேதி விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த சித்திரைத் தேர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அன்று திருச்சி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Comments are closed.