Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி..!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்று இரவு ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்று கூறப்படுகிறது. மேலும், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் கோவிலின் சார்பு கோவிலாக இருந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தைப்பூசமான நேற்று(25-01-2024) காலை சமயபுரம் கோவிலில் இருந்து மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் தீர்த்தவாரிக்கு கொள்ளிடத்துக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்களின் உபயங்களை பெற்று நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரைக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் மாரியம்மன் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், பழவகைகள் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளம் முழங்க, வான வேடிக்கையுடன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர். அங்கு சீர்வரிசை பொருட்களை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் அலுவலர்களிடம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் வழங்கினர். இதையடுத்து அம்பாளுக்கு ரெங்கநாதர்கோவில் பட்டுவஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மன் சமயபுரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்