ரூ.1,200 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட திருச்சி விமான நிலையம் 2ம் தேதி திறப்பு: தனி விமானம் மூலம் வருகிறார் பிரதமர் மோடி…
திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட உள்நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர் துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் முன் வந்தன. அதன்படி, ரூ.1,200 கோடி செலவில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் சகல வசதிகளுடனும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது.

இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு புதிய முனையத்தை திறந்து வைப்பதுடன் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் இருக்கிறார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. மேலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக புதுடெல்லியில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு அன்று காலை 10 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு செல்கிறார். அங்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வருகிறார். இதைத்தொடர்ந்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். விழா முடிந்ததும் மதியம் 1.05 மணிக்கு தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி திருச்சி வருவதை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் திருச்சி மாநகர போலீசார் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், விமான நிலையம் அருகே உள்ள வீடுகள் மற்றும் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.