Rock Fort Times
Online News

அரசியலில் மாபெரும் சக்தியாக உருவெடுத்த விஜயகாந்த்…

சினிமாவில் சாதனை படைத்த விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கி அதிலும் மாபெரும் சக்தியாக உருவெடுத்தார். முன்னதாக 2000-ம் ஆண்டு பிப்ரவரி 12-ல் தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டு பலர் வெற்றியும் அடைந்தனர். 2002–ல் `ராஜ்ஜியம்’ படத்திலிருந்து அரசியல் வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின. விஜயகாந்த் நடித்த `கஜேந்திரா’ படத்துக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. அதையெல்லாம் தாண்டி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. பொறுத்து பொறுத்து பார்த்த விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதுதான் தீர்வாக இருக்கும் என்ற கருதி 2005-ம் ஆண்டு, செப்டம்பர் 14-ம் தேதி மிகப்பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தி தேசிய முற்போக்கு திராவிட கழகம்” எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையாத நிலையில், 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தனித்துப் போட்டி என்று கூறி 232 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தே.மு.தி.க-வுக்கு 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்றுத்தந்தனர். இதன்மூலம் அரசியலிலும் விஜயகாந்த் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக உருவெடுத்தார்.

அதைத் தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்து நின்று, தோல்வியைத் தழுவினாலும் 10 சதவிகித வாக்குகளை தே.மு.தி.க பெற்றது. இதன்மூலம், விஜயகாந்தை தங்கள் கட்சிக்குள் இழுக்க பிரபல கட்சிகள் போட்டி போட்டன. தனித்தே போட்டியிட்டுவந்த விஜயகாந்த், முதன்முறையாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார். 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த் முதன்முறையாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.
தேர்தல் முடிந்து நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏற்பட்டு, அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி முறிந்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று தேர்தலைச் சந்தித்த தே.மு.தி.க., போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., வி.சி.க., த.மா.கா., கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம்வகித்த மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், தேர்தல் முடிவில் ம.ந.கூட்டணி உட்பட தே.மு.தி.க.போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியடைந்தது. உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்தும் தோல்வியை சந்தித்தார்.2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தே.மு.தி.க அனைத்திலும் தோல்வியடைந்தது. தனித்து போட்டியிட்டபோது 8.4%, 10% ஆக இருந்த தே.மு.தி.க-வின் வாக்கு வங்கி, கூட்டணிக்குச் சென்ற பின்னர் 7.9%, 6.1% எனக் குறைந்து 2016 சட்டமன்றத் தேர்தலில் 2.4% ஆகச் சரிந்தது.தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், இந்தத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவரின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலிலும் தேமுதிக தோல்வி அடைந்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்