Rock Fort Times
Online News

சினிமாவில் போராடி ஜெயித்த விஜயகாந்த்…

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி – ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் விஜயராஜ் என்கிற விஜயகாந்த். இவரின் மனைவி பிரேமலதா. இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சிறு வயது முதலே சினிமாமீது இருந்த பிடிப்பின் காரணமாக அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை ஒவ்வொரு காட்சியாக நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார். இருந்தாலும் சினிமா மீதான ஆர்வம் சற்றும் குறையவில்லை. எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தை தொடங்கினார் விஜயகாந்த். அவருக்கு பக்க பலமாக விஜயகாந்தின் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இருந்தார்.
தொடர்ந்து `சட்டம் ஒரு இருட்டறை’, `தூரத்து இடிமுழக்கம்’, `சிவப்பு மல்லி’ என வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். அவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்த படம் ஆர்.சுந்தர்ராஜனின் வைதேகி காத்திருந்தாள். இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடியது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு இணையாக பெரிய ஹீரோவாக உருவெடுத்தார். தொடர்ந்து அவர் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே மீண்டும் வெள்ளி விழா படமாக அமைந்தது. போலீஸ் கேரக்டரிலும் வெளுத்து வாங்கினார். புலன் விசாரணை, ஊமை விழிகள், சத்ரியன், மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ் போன்ற போலீஸ் கேரக்டர் படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தனது நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் ஐ எஃப் எஸ் அதிகாரியாக நடித்தார். அந்த படம் 350 நாட்களைக் கடந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. உழவன் மகன், செந்தூரப்பூவே, வானத்தைப்போல, ரமணா போன்ற படங்களும் வெற்றி படங்களாக அமைந்தன. 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் சாதனை புரிந்தார்.  1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி அந்தக் கடனை அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். 2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, விஜயகாந்த் அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார். 1965-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது சிறு வயதிலேயே விஜயகாந்த் பங்கேற்றதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, 1984-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார். பின், 1986-ம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
இவ்வாறு தமிழ் இனத்துக்காகவும், தமிழர்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர் கேப்டன் விஜயகாந்த்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்