Rock Fort Times
Online News

கட்டுமான தொழிலாளர்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்…

நலவாரியம் வழங்கும் 1200 ரூபாய் ஓய்வூதியம் ஏற்புடையதல்ல. வாரிய முடிவின்படி மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் போல தீபாவளி போனஸ் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் 104வது அமைப்பு தினமான இன்று ( 31.10.2023 ) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 5 லட்சம் தபால் அட்டை அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. அதன்படி, திருச்சி தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் பழனியப்பன், முத்தழகு, மருதாம்பாள் உள்ளிட்ட கட்டிட தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக கோரிக்கை முழக்கமிட்டனர். பின்னர் தபால் அட்டைகளை அனுப்பி வைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்