கும்பகோணம், திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதித்தவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு வார்டு தொடங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் இந்த வார்டில் போடப்பட்டுள்ளது. அதில் 10 ஐசியூ படுக்கைகள், 20 படுக்கைகள் குழந்தைகளுக்காகவும், 20 படுக்கைகள் பெரியவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. படுக்கையில் கொசுவலைகள் கட்டப்பட்டு உள்ளன. அத்துடன் தேவையான அளவு ரத்த அணுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டெங்கு வார்டை மருத்துவமனை டீன் நேரு, திருச்சி மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். முன்னதாக திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவகல்லூரி மற்றும் அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவமனை வளாகத்தில் இருந்து பேரணியாக வந்து வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்கை வந்தடைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அரசு மருத்துவமனை டீன் நேரு கூறியதாவது:-
கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை கண் தானம் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று பேரணி நடத்தப்பட்டது. கண் தானம் செய்வதால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். கண் தானம் யார் செய்யலாம், கண் தானம் செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த கண்காட்சி மூலம் தெரிந்து கொள்ளலாம். இறந்த பிறகு கண்தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும். தற்போது திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் நோயாளிகள் யாரும் இதுவரை மருத்துவமனைக்கு வரவில்லை. இருப்பினும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டு தயார் நிலையில் உள்ளது. டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது நீர்ச்சத்து குறைபாடு இருக்கும். இந்த நீர் சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான மருந்துகளும், டெங்கு காய்ச்சலை சரி செய்வதற்கான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. நிபா வைரஸ் தற்போது கேரளாவில் பரவுவதாக கூறப்பட்டாலும், தமிழகத்தில் குறிப்பாக திருச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் நிபா வைரஸ்க்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இருப்பினும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது . இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.