19வது உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகரான புடா பெஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதன் இறுதிச்சுற்றின் முதல் முயற்சியில் சொதப்பினாலும் இரண்டாவது முயற்சியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிதலில் முதல் இடத்திற்கு முன்னேறி முன்னிலை பெற்றார். கடைசி வரை இந்த தூரத்தை யாராலும் கடக்க முடியவில்லை. பாகிஸ்தானை சேர்ந்த ஹர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து மிக அருகில் வந்தார். 86.67 மீட்டர் தூரம் எரிந்து செக் குடியரசை சேர்ந்த யாகூப் மூன்றாம் இடத்தை பிடித்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா வெல்லும் மூன்றாவது பதக்கம் இது. ஏற்கனவே 2003-ம் ஆண்டு நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் வென்று இருந்தார். கடந்த ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு உலக தடகள அரங்கில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த நீரஜ், இம்முறை தங்கம் வென்று சாதித்து இருக்கிறார். இவர் இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியிலும் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற 25 வயது நீரஜ் சோப்ராவிற்க்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.