திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சந்தேகத்திற்கிடமான முறையில் போதையில் நின்று கொண்டிருந்த 3 பேரை மணப்பாறை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒருவர் ஈரோடு மாவட்டம் காளிங்கராயன்பாளையம் பழையூரைச் சேர்ந்த நல்லுசாமி (வயது 41), சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஸ்ரீ விக்ரமன் (32), வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரூபன் (31) என்பதும் இந்த 3 பேரும் ஓரினச் சேர்க்கைக்கு என உள்ள ஆப் மூலம் ஒன்றிணைந்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததும், பின்னர் ஓரினச் சேர்க்கையில் அந்த ஆப்பில் உள்ள நபர்கள் மூலம் போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்த போது அவற்றில் ரூ.3 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த போதை பொருட்கள் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் வீ. வருண்குமார் ஐபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
போதை பொருட்கள் விற்பனை செய்ததாக 3 பேரை கைது செய்துள்ளோம். மேலும் இந்த சம்பவம் தொடர்பான தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு போதை பொருட்கள் கொடுத்தது யார் என்பதை கண்டறிந்து அதற்கான நடவடிக்கை எடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.