Rock Fort Times
Online News

நவல்பட்டு ஊராட்சியில் உப்பு மணலில் வடிகால் பணி…! (வீடியோ இணைப்பு)

மக்கள் நலசங்கத்தினா் குற்றச்சாட்டு...

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது, நவல்பட்டு ஊராட்சி. இங்குள்ள ஐ.டி பார்க், அண்ணாநகர் பகுதியில் மழைக்காலங்களில் போதிய வடிகால் வசதியின்றி, மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் அண்ணாநகர் சேட்டிலைட் மக்கள் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு வடிகால் வசதி வேண்டி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து அண்ணாநகர் பகுதியில் 120 மீட்டர் நீளத்திற்கு பாலம் மற்றும் வடிகால் அமைக்க திட்டமிட்டு ரூ 7.75 லட்சம் மதிப்பீட்டில் தற்பொழுது பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணா நகர் சேட்டிலைட் நல சங்க செயலாளர் பி. பெரியசாமி தலைமையில் சென்ற சங்கத்தினர், வடிகால் கட்டுமான பணிக்கு உப்பு மணலை ஒப்பந்ததாரர் பயன்படுத்தி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பணியை நிறுத்த சொன்னதுடன், இது குறித்து திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து பொறியாளர் ரகுமான் சம்பவஇடத்திற்கு வந்து பார்வையிட்டு உப்பு மணலில் வடிகால் கட்டுவதை உடனே நிறுத்தினார். மேலும், அங்கு கட்டுமானப்பணிக்காக கொட்டப்பட்டிருந்த உப்பு மணலை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.

இதுகுறித்து நல சங்கத்தினர் கூறுகையில், நவல்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமான பணிகளுக்கும், சமத்துவபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கும் நவல்பட்டு ஊராட்சிக்குட்பட்ட உப்பாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியே பணிகளுக்கு ஒப்பந்ததாரர் பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினர். மேலும் ஊராட்சி கட்டுமான பணியின் போது பொறியாளர் கண்டிப்பாக இருந்து பார்வையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பொறியாளர் இனிமேல் தவறு நடக்காது என்று உறுதி கொடுத்ததை அடுத்து நல சங்க நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்