திருச்சி சர்வதேச விமான நிலைய சரக்கு முனையம் சார்பில் பல்வேறு நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த ஒயின் பாட்டில்களை இறக்குமதி செய்தனர். சுங்கவரி பிரச்சினையால் சம்பந்தப்பட்டவர்கள் அந்த மதுபாட்டில்களை வாங்கி செல்லாமல் அப்படியே விட்டு விட்டனர். ஒன்றல்ல, இரண்டல்ல 12 ஆண்டுகள் அந்த மது பாட்டில்கள் வாங்கிச் செல்லப்படாததால் சுங்கத்துறையினர் குடோனில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதைதொடர்ந்து சுங்க இலாக்கா அதிகாரிகள் வெளிநாட்டு மது கம்பெனிகளை தொடர்பு கொண்டு கேட்பாரின்றி கிடக்கும் மது பாட்டில்களின் காலாவதி குறித்து விசாரித்தனர். அப்போது அந்த மதுபான பாட்டில்கள் காலாவதி ஆகிவிட்டது என தெரிவித்தனர். இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பயன்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டதால் அவற்றை கரூரில் உள்ள குப்பை கிடங்கில் அதிகாரிகள் முன்னிலையில் அளிக்கப்பட்டது. இதில் சுமார் 8,000த்துக்கும் அதிகமான ஒயின் பாட்டில்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் முழுவதுமாக அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட ஒவ்வொரு மது பாட்டில்களின் விலை இந்திய ரூபாய் மதிப்புக்கு ரூ.5000 இருக்கும். அவ்வாறு கணக்கிட்டால் 8000 ஒயின் பாட்டில்களின் மதிப்பு ரூ.4 கோடியாகும்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.