புதுக்கோட்டையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் கலீல் ரகுமான் என்பவர் தனது கட்சிக்காரரான பெண் தரப்பிற்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அப்போது கலீல் ரகுமானை, அந்த பெண்ணின் கணவர் ஆரோக்கியராஜ் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து 6 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கடந்த 7-ம் தேதி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்காத திருக்கோகர்ணம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கீதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படாததால் சப்- இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தினர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வழக்கறிஞர்கள் புதுக்கோட்டை – மதுரை சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ஆரோக்கியராஜை 2 நாட்களில் கைது செய்யவும், சப்- இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டைக்கு மாற்றவும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அதன்படி, ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சங்கீதா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அவர், இன்று அதிகமான தூக்க , மாத்திரைகளை தின்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.