திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 75-ம் ஆண்டு விளையாட்டு விழா… * சுங்கவரித்துறை உதவி ஆணையர் எம்.பாலு பங்கேற்பு..!
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 75-ம் ஆண்டு விளையாட்டு தின விழா இன்று (07-08- 2026) காலை 9 மணியளவில் கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் இர. ஜாஹிர் ஹுசைன் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்லூரியின் முன்னாள் மாணவரும், திருச்சிராப்பள்ளி சுங்கவரித்துறை உதவி ஆணையருமான எம். பாலு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், ”விளையாட்டானது மாணவர்களிடம் நல்லொழுக்கத்தையும், சமூகத்தின் மீது பற்றினையும் வளர்க்க உதவுகிறது. மாணவர்களாகிய நீங்களும் இந்தக் கல்லூரிக்கு என்னைப் போலவே சிறப்பு விருந்தினராக வருகை தரும் அளவிற்கு உயர வேண்டும். அதற்காக நீங்கள் நூறு சதவீதம் உழைப்பினைக் கொடுக்க வேண்டும். கடின உழைப்புதான் மனிதனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று கூறினார். முன்னதாக, தேசிய மாணவர் படை கமாண்டர் இர. தண்டபாணி தலைமையில் கலை மற்றும் அறிவியல் துறை மாணவர்கள் பங்கேற்ற 22 அணியினரின் அணிவகுப்பு நடைபெற்றது. மாணவர்களுக்கிடையே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட 16 வகையான தடகளப் போட்டிகளும், 8 வகையான குழு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. தனிநபருக்கான வெற்றிக் கோப்பையை இளநிலை வணிக மேலாண்மைத் துறை மாணவர் சிவபாரதியும், 40 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த வெற்றியாளர்களுக்கான கோப்பையை கணினி அறிவியல் துறை மாணவர்களும் பெற்றனர். கல்லூரியின், செயலர் மற்றும் தாளாளர் டாக்டர். அ.கா. காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலர் கே. அப்துஸ் சமது, நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் மதிப்புறு இயக்குநர் கா. ந. அப்துல் காதர் நிஹால் மற்றும் விடுதி நிர்வாக இயக்குநர் கா. ந. முகமது பாசில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூடுதல் துணை முதல்வர்கள் ஷே.நாகூர் கனி, அ.ஜாபர் அஹமத் மற்றும் துறைத் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உடற்கல்வித் துறை இயக்குநர் பி. எஸ். ஷாயின்ஷா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். நிறைவாக கல்லூரியின் துணை முதல்வர் ஏ. ஜே.ஹாஜா முகைதீன் நன்றி கூறினார்.

Comments are closed.