தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரிடையே நிலவி வந்த தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் விஜய் மீது விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரி சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு வந்தது. பிரபலங்கள் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களினாலும் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, காணொளி காட்சி மூலமாக ஆஜராக நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த வழக்கு இன்று(07-08-2026) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா முன்னிலையில் சங்கீதா காணொளி வாயிலாக ஆஜரானார். சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தனது தரப்பு விளக்கங்களை அவர் நீதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்தார். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், விஜய் தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பு வகிக்கும் நிலையில் அவரது நற்பெயருக்கு எவ்விதக் களங்கமும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகச் சங்கீதா, நீதிபதியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கணவர் விஜய் மீது தொடரப்பட்ட விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோரும் வழக்குகளைத் தாமாகவே முன்வந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாகச் சங்கீதா தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை முழுமையாக முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டு இருப்பதால் முதல்வர் விஜய் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.