திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு …!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, நரியம்பட்டியைச் சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் தலையில் அடிபட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தாலும் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதுகுறித்து அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததோடு உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருவதாக இருந்தால் உயிருக்கு போராடும் மற்றவர்கள் மறுவாழ்வு பெறுவார்கள் என்று எடுத்துக்கூறினர். இதனை உணர்ந்த அந்த வாலிபரின் உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். அதனைத்தொடர்ந்து அந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகியவை அகற்றப்பட்டன. அந்த உறுப்புகளில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சையை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன், சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் நூர்முகமது, மயக்கவியல் மருத்துவர் சந்திரன், மற்றும் குழுவினர் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக செய்து முடித்தனர். இதன்மூலம் அந்த நோயாளி தற்போது நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 37-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும். மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கும், கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இரு கண்விழிகளும் இம்மருத்துவமனையில் பயனாளிகளுக்கு தானமாக வழங்க பெறப்பட்டது. இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு அடையப் போவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
*
Comments are closed.