‘தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்’ என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வருகிற ஜூன் 22ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று (ஜூன் 16) முதல் 20ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.