Rock Fort Times
Online News

குமாரபாளையம் அருகே பனைமரத்தில் கார் மோதி 4 வாலிபர்கள் பலி…!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சீராம்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ்(26). திருவிழாக்களில் பேண்ட் செட் குழுவில் வாத்திய கலைஞராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களாக சீராம்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, லோகேஷ் வீட்டுக்கு ஆலாம்பாளையத்தை சேர்ந்த தனசேகர்(29), கிழக்கு தொட்டி பாளையம் ஸ்ரீதர்(17), ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கவின் (22), காஞ்சிக்கோயில் தோப்புக்காட்டை சேர்ந்த சிவக்குமார்(23) ஆகியோர் விருந்தினர்களாக வந்திருந்தனர்.

இவர்கள், 5 பேரும் தனசேகரின் காரில் குமாரபாளையம் சென்றுவிட்டு சீராம்பாளையம் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தனசேகர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் வேகமாக வந்த கார் நிலை தடுமாறி குப்பாண்டபாளையம் பஸ் ஸ்டாப் முன்பு சாலையோரமிருந்த பனை மரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஸ்ரீதர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இவர் பவானியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுக்குள் சிக்கியிருந்த 4 பேரின் உடல்களையும் பொதுமக்கள் உதவியோடு மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான தனசேகர் தனியார் பஸ் டிரைவராக பணியாற்றினார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. லோகேசுக்கு லலிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சிவக்குமார் தனியார் பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். 5 பேரும் குமாரபாளையம் வந்து மது குடித்துவிட்டு போதையில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்