திருச்சி, கூத்தூர் அருகே 3 தனியார் கல்லூரி பேருந்துகள் அடுத்தடுத்து மோதல்… * அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்! (வீடியோ இணைப்பு)
திருச்சி, நம்பர் ஒன் டோல்கேட் அடுத்துள்ள கூத்தூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம்போல இன்று( மார்ச் 24) வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது முன்னால் சென்ற கார் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அந்த நேரத்தில் காரின் பின்னால் சமயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த எஸ்.ஆர்.எம் கல்லூரி பேருந்தின் ஓட்டுனர் காரின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அதேபோல, சமயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி பேருந்தும் அதனைத்தொடர்ந்து வந்த மற்றொரு எஸ்.ஆர்.எம் கல்லூரி பேருந்தும் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின. இதில் ஒரு கல்லூரி பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்தது. இந்த விபத்தில் மூன்று பேருந்துகளிலும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.