தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் பகுதியில் தனியார் மீன்கள் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (19-07-2024) நள்ளிரவு அந்த ஆலையில் மின் விபத்து காரணமாக அமோனியா கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன் பதனிடும் ஆலை முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதில் அங்கு பணியில் இருந்த தமிழகத்தின் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் என 21 பேருக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த ஆலையின் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் மருத்துவமனையில் பெண் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து இன்று காலை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் முரளி தலைமையிலான அதிகாரிகள் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி இரவில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 54 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.