இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் போர் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு உயிர்கல்வி, ஆராய்ச்சி படிப்பு மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்ற இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி “ஆபரேஷன் அஜய்” என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். முதல் கட்டமாக 212 இந்தியர்கள் நேற்று அதிகாலை 6 மணிக்கு டெல்லிக்கு அழைப்பு வரப்பட்டனர். அவர்களில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமானம் மூலம் நேற்று அழைத்து வரப்பட்டனர். திருச்சியை சேர்ந்த 3 பேர், மதுரை, திருவாரூர், காஞ்சிபுரம், தேனி மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேர், புதுக்கோட்டை, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவர் என 14 பேர் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று வந்தனர். மற்ற 7 பேர் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். இதற்கான மொத்த செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது. சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பகல் 12-35 மணிக்கு வந்த 14 பேரையும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் திருச்சி கருமண்டபம் திருநகரை சேர்ந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயிலும் ர. பழனியப்பன் (24) என்ற மாணவர், திருச்சி உறையூரை சேர்ந்த குருச்சரண் (29) என்ற ஆராய்ச்சி படிப்பு மாணவர் ஆகியோர் நேற்று இரவு திருச்சி வந்து சேர்ந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இஸ்ரேலில் போர் நடைபெறும் சூழலில் தங்களை மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.