நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து…
வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த 10ம்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட ‘செரியபாணி’ என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 7ம்தேதி வந்தது. இதன்பின்னர் 8ம்தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்ததால், மறுநாள் 9ம்தேதி நடக்கவிருந்த சோதனை ஓட்டம் ரத்து செய்யப்பட்டது. 10ம்தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், திடீரென நிர்வாக காரணங்களால் பயணிகள் கப்பல் போக்குவரத்து 12ம்தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவங்கப்படவில்லை. 14ம்தேதி (இன்று) போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று(14ம்தேதி) காலை 8.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனை ஒட்டி நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால், தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கை காங்கேசன் துறை வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
150 பேர் பயணிக்கும் இந்த கப்பலில் முதல் நாள் பயணத்திற்காக 50 பேர் முன்பதிவு செய்திருந்தனர். பயணி ஒருவர் 50 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணம் செய்ய நபர் ஒன்றுக்கு கட்டணம் ரூ.6,500 மற்றும் ஜிஎஸ்டி 18% என மொத்த கட்டணம் ரூ.7,670 ஆகும். நாகை-இலங்கை கப்பல் பயணிக்க நேற்று முன்தினம் இரவு வரை 30 பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். பயணிகள் போதிய ஆர்வம் காட்டாததால் கப்பல் போக்குவரத்து தொடங்கும் முதல் நாளில் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டது. அந்தவகையில் ரூ.2,375 மற்றும் ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.