தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தமிழக முழுவதும் இன்று(20-03-2024) தொடங்கியது. திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், திருச்சி ஆர்டிஓ உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களிடம் திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வருகிற 27 ந் தேதி வரை தினமும் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர் ராஜேந்திரன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் பொழுது தன்னுடைய கழுத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து வந்து மனு தாக்கல் செய்தார் . இதேபோல பெண் ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் தொடங்கியதை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
வருகிற 27ந் தேதி ஆகும். 28ந் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். 30 ந்தேதி மாலை 3 மணிக்குள் வேட்பாளர் விரும்பினால் மனுவை திரும்ப பெறலாம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.