திருச்சி ரெயில்வே பயிற்சி நிறுவனத்தில் 14 மாணவர்கள் அம்மை நோயால் பாதிப்பு..
நடவடிக்கை எடுக்க எஸ்.ஆர்.எம்.யு. வலியுறுத்தல்..
திருச்சி ரெயில்வே மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் 420 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் 14 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேரை ரெயில்வே நிர்வாகம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு இங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி கோட்ட செயலாளரும், எஸ்.ஆர்.எம்.யூ. துணை பொது செயலாளருமான வீரசேகரன் இன்று ( 01.06.2023 ) தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களை சந்தித்து அவர்களுக்கான உணவு வகைகள், சிகிச்சை முறைகள், இணையதள மூலம் அளிக்கப்படும் பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரெயில்வே நிர்வாகம் அம்மை நோய் பாதித்தவர்களை இங்கு வைத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. ஆனால் மாநகராட்சி மேயர் அன்பழகன் பயிற்சி மையத்தில் ஆய்வு நடத்தி இங்கு இருக்கக்கூடிய மாணவர்களை பரிசோதனை செய்து அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடிய மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இருப்பினும் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு உரிய மருத்துவ , சிகிச்சையை , அளிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.