Rock Fort Times
Online News

ரூ.2000 கோடி போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் சிக்கினார், ஜாபர் சாதிக்…!

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து வெளி நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி முன்னாள் துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். தன்னை டெல்லி போலீசார் தேடுவதை அறிந்த ஜாபர் சாதிக் தலைமறைவானார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரையும், அவரதுகூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை உறுதிப்படுத்திய என்சிபி அதிகாரிகள், முழு விவரங்களை மதியம் 2 மணிக்கு மேல் சொல்வதாக தெரிவித்துள்ளனர்.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்