ஊழல் என்பது மனித குலத்துக்கு எதிரான குற்றம்… அன்பில் மகேஷுக்கு முன் ஜாமினை நிராகரித்த நீதிபதி லட்சுமி நாராயணன் கருத்து..!
கடந்த திமுக அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தனது பதவி காலங்களில் தனியார் பள்ளிகளிடம் ரூபாய் 400 கோடி வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு அங்கீகாரம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தனியார் பள்ளி சங்கங்களின் தலைவர் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நான்காவது குற்றவாளியாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது. அவர் தனது தீர்ப்பில், ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை மட்டுமே விசாரிக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்பட்ட அதிகாரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மட்டுமே இருப்பதாகக் கூற முடியாது. அமைச்சர் ஒருவர் தொடர்புடையவராக இருப்பதற்காக மட்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஊழல் என்பது மனித குலத்துக்கு எதிரான குற்றம். முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும்போது ஊழல் என்பது மிகக் கடுமையான பொருளாதாரக் குற்றம் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழல் என்பது அரசுக் கருவூலத்தை மட்டும் பாதிப்பதில்லை. அது மனித குலத்துக்கு எதிரான குற்றமாகவும் இருக்கிறது. மனித உரிமைகளையும் நேரடியாகப் பாதிக்கிறது. இத்தகைய ஊழல் வழக்குகளில் முன்ஜாமீன் வழங்குவதற்கான அணுகுமுறையும், வழக்கமான ஜாமீன் வழங்குவதற்கான அணுகுமுறையும் அடிப்படையிலேயே வேறுபட்டவை. இந்த வழக்கில் அன்பில் மகேஷுக்குத் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்திலேயே காவல்துறைக்குத் தகவல் கிடைக்கவில்லை. விசாரணை நடத்தியபோதுதான் அவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதுபோன்ற வழக்குகளில் பல்வேறு வங்கிக் கணக்குகளையும், பணப் பரிமாற்றங்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல அடுக்குகளைக் கொண்ட ஊழல் முறைகேடுகள், ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள், சதியில் பல்வேறு நபர்களின் தொடர்பு ஆகியவற்றை விசாரிக்க வேண்டிய சூழலில் முன்ஜாமீன் வழங்குவது விசாரணையின் போக்கையே பாதித்துவிடும். இந்த வழக்கில் அன்பில் மகேஷ் வெளியே இருந்தால் சாட்சிகளைக் கலைக்கவும், விசாரணைக்குத் தடையாக இருக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கடுமையான அச்சம் எழுந்துள்ளது.
மேலும், தலைமறைவாக உள்ள A-2 முத்துக்குமாரை அன்பில் மகேஷ் பாதுகாத்திருப்பதாக முதல்கட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணையே முடங்கிவிடும். தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. அதே நேரத்தில் ஊழலற்ற அரசு நிர்வாகம் வேண்டும் என்ற சமூகத்தின் தேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதுவரை பாதிக்கப்பட்ட 177 பேர் முன்வந்து வாக்குமூலம் அளித்துள்ளனர். அன்பில் மகேஷ் அரசியலில் உயர்ந்த பதவியில் இருப்பவர். A-2 (முத்துக்குமார்) கைது செய்யப்படுவதற்கு முன்பே அன்பில் மகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கினால், அது தலைமறைவாக உள்ள நபர் விசாரணையிலிருந்து தப்பிக்க உதவுவதாக அமைந்துவிடும். பணப் பரிமாற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பணம் வசூலிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார், இறுதியாக அந்தப் பணம் யாரிடம் சென்றது என்பதைக் கண்டறிய காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமாகிறது. கட்சி நிதி (Party Fund) என்ற பெயரில் பணம் பெற்றதாக அன்பில் மகேஷ் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் கட்சி நிதி இறுதியாக யாருக்குச் சென்றது என்பதை அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்காமல் கண்டறிய முடியாது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.