திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (50). இவர், நகைகள் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது நண்பர் குட்டக்கரையை சேர்ந்த ரவி (52). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்று(27-04-2024) காலை அடிவாரப் பகுதியில் நடைபயிற்சி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் துறையூரிலிருந்து அடிவாரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். துறையூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள தனியார் அரிசி ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரவி, பலத்த காயமடைந்தார்.

விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் ரவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.